search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிக்கு திரும்பினர்"

    தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்தார். #JactoGeo
    தர்மபுரி:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை கைவிட்டு பணியில் சேர வேண்டும் அல்லது சேருவதாக தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று தர்மபுரி மாவட்டத்தில் 95 சதவீதத்துக்கு மேல் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் என்றும், அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்பட்டதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்தார்.

    மேலும், தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் யார் மீதும் சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் வேலைக்கு வந்து விட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி கூறினார்.

    இன்று வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.  #JactoGeo


    போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 96 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. #JactoGeoStrike #TeachersProtest
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத சம்பள நிலுவை தொகை, ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    கடந்த 22-ந்தேதி தொடங்கிய போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்தது. ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.



    போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

    ஆனாலும் அரசின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் போராட்டம் நீடித்து வருகிறது. மாவட்ட தலை நகரங்களில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. முதல்கட்டமாக பணிக்கு வராத 400 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை ஈடுபட்டது.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் முதன்மை கல்வி அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    முதுநிலை பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு படித்து வேலைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

    அரசு ஊழியர்கள் போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள் முடங்கி உள்ளன. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் 65 சதவீத அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் திருப்புதல் (ரிவிசன்) தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர். வருகிற 1-ந்தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்க உள்ளது.

    இதுபோன்ற நிலையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

    மாணவர்கள் நலன் பாதிக்கப்படுவதால் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை நேற்றும் எச்சரிக்கை விடுத்தது.

    எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் மூலமாக முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பணியில் சேரலாம் என்றும் அவகாசம் அளித்தது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

    உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 96 சதவீதம் பேரும், தொடக்கப்பள்ளியில் 70 சதவீதம் பேரும் இன்று பணிக்கு திரும்பியதாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

    சென்னையில் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்பட்டதாகவும். 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர் என்றும் சென்னை முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி கூறினார்.

    இதற்கிடையே பணிக்கு வராத ஆசிரியர்களை சஸ்பெண்டு செய்து தற்காலிக ஆசிரியர்களை கல்வித்துறை நியமித்து வருகிறது.

    ஏற்கனவே 400 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 602 ஆசிரியர்கள் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கல்வித்துறை பிறப்பித்தது. மொத்தம் 1002 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    சஸ்பெண்டு நடவடிக்கையை தொடர்ந்து 1002 பணியிடங்களை காலியிடமாக அறிவித்து அவற்றுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சென்னையில் 3 இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

    இதுபோல் தமிழ்நாடு முழுவதும் 1.5 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். #JactoGeoStrike #TeachersProtest
    சங்கரன்கோவிலில் கடந்த 40 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.
    நெல்லை:

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை கால சம்பளம் ரூ. 300 என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதேபோல் சுப்புலாபுரம் கிராம பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் கூலி உயர்வு கேட்டு போராடி வந்தனர். இதனால் பல கோடி ரூபாய் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பாக நெல்லை தொழிலாளர் துறை அதிகாரிகள் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர் களுடன் ஏற்கனவே 4 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் பாளையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் 5-வது கட்டமாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    நீண்டநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. முடிவு எதுவும் எட்டவில்லை. இதனால் பேச்சுவார்த்தை 5-வது முறையாக‌ தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து கடந்த 5-ந்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று 40-வது நாளாக நீடித்தது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுமார் 20 கோடி ரூபாய் வரையிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் பாளையில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிற் சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள், அதிகாரிகள் தரப்பு என முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    இதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் 19 சதவீத கூலி உயர்வு, விசைத்தறி உரிமையாளர்களுக்கு 17 சதவீத ஒப்பந்த தொகை உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    இதை தொடர்ந்து கடந்த 40 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.

    ×